தமிழ் மொழியின் தொன்மை


தமிழ் மொழியின் தொன்மை


தமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன என மொழியியல் அறிஞர்கள் கருத்துத்துரைத்துள்ளனர். 


அவற்றுள் ஒரு சில மொழிகள் மட்டுமே இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்ற மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே காட்சியளிக்கின்றன. 

கால மாற்றத்திற்கேற்ப புத்தம்புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி மாயும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து விளங்குவன தமிழ், சீனம் முதலிய சில மொழிகளேயாகும்.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வலம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி - மாக்ஸ் முல்லர்

பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ் மொழியாகும்.

மாடு கிழமானாலும் பால் புளிக்காதுஎன்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே!.அப்பழமொழியின் பொருள்போல் தமிழ் எத்துணை பழமை வாய்ந்திடினும் இனிமை குன்றாத மொழியென்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

தமிழ்என்னும் சொல் முதன் முதலில் காணப்பெறும் நூல் தொல்காப்பியமாகும். தமிழென் கிளவி”,”செந்தமிழ் நிலத்துஎன வரும் நூற்பாத் தொடர்களில் இவ்வுண்மையைக் காணலாம். பனம்பாரனார்தம் தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் தமிழ்கூறும் நல்லுலகத்துஎனும் தொடரும் தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுவனவாம். தமிழ் வையைத் தண்ணம் புனல்என எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடல் தமிழின் இனிமையைக் கூறுகின்றது. 

செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் .....

மொகஞ்சதரோவில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் கூறுகள் தமிழில் காணப்படுகின்றன. அதனால் இப்போது உலகில் பேசப்படுகின்ர மிகவும் பழமையான மொழி தமிழ் மொழிதான். ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழில் காணப்படுகின்றன. 

சுமேரியர் ரோமானியர் கிரேக்கர் ஆகிய பண்டைய இனத்தவர்கள் நாகரிகமுடையவர்களாக விளங்குவதற்கு முன்னரே தமிழர்கள் செப்பமிட்ட சீரிய நெறிகளைக் கடைப்பிடித்து பண்புடையோராய் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதம் ஹிப்ரு கிரேக்கம் ஆகிய மொழிகளிலுள்ள பழைய இலக்கியங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று மொழியியலர் இராய்ஸ் டேவிட்ஸ் கூறுகிறார்.

மனித இனம் வாழவும் வசிக்கவும் ஏற்புடைய நிலமாக விளங்கியது இன்றைய தமிழகத்தின் தென்நிலப்பரப்பு என்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். அந்தத் தென்நிலப்பரப்பிலே பேசப்பட்ட மொழியானது மிகத் தொன்மை வாய்ந்த நமது உயர்தனிச் செம்மொழி தமிழாகும் என்பது பன்னாட்டு மண்ணியல், உயிரியல், அறிவியலாளர் ஆய்வுகளின் வழி கிடைக்கப்பெற்ற ஒருமித்த உண்மைக் கருத்துகள்.

குமரிக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதியே மக்கள் வாழ்வதற்குத் தக்க நிலையை அடைந்தது. அங்குதான் முதன் முதலில் மக்கள் தோன்றி வளர்ந்து நாகரிகத்தை உலகிற்குப் பரப்பினர். 
- அறிஞர் ஹெக்கல்

உலகிலேயே மொழிக்கென முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ச் சங்கமே. தமிழ் மொழியின் வாழ்வுக்கும் உயர்வுக்கும் சிறப்பீட்டித் தந்த பெருமைக்கு உரியவர்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்களே. தமிழினம் சிறப்புற்றிருக்கும் வகையில் தமிழைச் சீர்செய்யவும் வளப்படுத்தவும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயலாற்றியவர்கள் பாண்டிய மன்னர்களே என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நான் முதன் முதலில் தமிழர்களிடத்தே எனது சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் படிக்கத் தொடங்கும்போதே, அதன் இனிமையும் எளிமையும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. உலகத்தின் தலைசிறந்த ஒரு மொழியைக் கற்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்றிலிருந்து தமிழைக் கற்பதிலும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதிலுமே எனது வாழ்நாளைச் செலவிட்டேன்.
-போப்பையர்

தமிழின் தொன்மையையும் இனிமையையும் அறிந்து அனுபவித்து மேலும் செழிப்புடையதாக்கவும் செம்மைப்படுத்தவும் கற்றறிந்த மேதைகளை ஒன்றிணைத்து மொழி ஆய்வு செய்யவும் அரும் பெரும் இலக்கியங்களை உருவாக்கவும் முதல் சங்கத்தைத் தோற்றுவித்தவன் காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். காய்சினவழுதி முயற்சியால் விளைந்ததே முதற்சங்கம்.

குமரிக் கண்டத்திலே தோற்றுவிக்கப்பட்ட முதற்சங்கத்தின் காலம் ஏறத்தாழ பதின் மூன்றாயிரம் ஆண்டுகளாகும். நூற்றுக்கணக்கான புலவர்கள் தமிழ்த்தொண்டாற்றிய ஏறக்குறைய 4400 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்த இந்த தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னர்கள் கண்ணும் கருத்துமாய் பேணி வளர்த்தனர். கடுங்கோன்என்ற மன்னன் காலத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் முதற்சங்கம் அழிவுற்றது.

இடைச்சங்கம் வெண்டேர்ச்செழியன் என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இயங்கி வந்தது. மீண்டும் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் இடைச்சங்கமும் அழிவுற்றது.

சிலகாலங் கழிந்து முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனின் பெருமுயற்சியால் தமது தலைநகரான மதுரை நகர் எனப்படும் கூடல் மாநகரில் கடைச்சங்கம் தோற்றம் கண்டது. ஏறத்தாழ 1800 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கிய இக்கடைச் சங்கமும் காலச்சூழ்நிலை காரணத்தால் மறைந்து போனது. மாணவர்களே! மொழிக்கெனச் சங்கம் வைத்து வளர்த்த மூத்த தமிழினத்தின் வரலாறு இப்படித்தான் முடிவுற்றது.

தமிழின் நிலைப்பாட்டிற்கு வழிகோலிய பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தை களப்பிரர், பல்லவர், மராட்டியர், முகமதியர்கள், நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல்லினத்தவர் ஆட்சி செலுத்தினர். அதிகார பீடத்திலிருந்தோரின் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றின் தாக்குறவால் தமிழ் இலக்கியத்திலும் பற்பல மாறுதல்கள் உருபெற்றன. 



தமிழ்

Comments

  1. Why no recent blogs?? Your blogs are excellent with lot of information. Please keep going.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை