அழிவின் விளிம்பில் அரிய வகை மூலிகைகள்


அழிவின் விளிம்பில் அரிய வகை           மூலிகைகள்


பரந்த வயல்வெளி, அடர்ந்து விரிந்த மரங்கள், செடி, கொடிகள் என இயற்கையான சூழலை கால மாற்றத்தில் காவு கொடுத்து விட்டோம். இதனால் வறட்சி நிலவி மிக மோசமான சூழல் நிலவி வருகிறது. ஆறு, கண்மாய்கள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. கோடை காலத்தில் குடங்களுடன் குடிநீர் தேடி பல கிமீ தூரம் பெண்கள் நடையாய் நடக்கின்றன. மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். ஒதுக்கித்தள்ளினாலும் செல்ல முடியாத அளவுக்கு வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்கும். இப்படி நம் தென்மாவட்ட மக்கள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவிதமான கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில் நாம் இயற்கையான அதுவும் மூலிகைகள் சூழ்ந்த நிலையில் வாழ்ந்திருந்தோம் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது அல்லவா? ஆம்... நம் தமிழ் பாரம்பரியம் இயற்கை வைத்தியத்தையே அதிகம் சார்ந்திருந்தது. சித்தர்களும், பாட்டிகளும் பச்சிலை தந்தே நோய்கள் துரத்தினர். வீடுகள்தோறும் இருந்த குடிநிசட்டிகளில் மருந்துகள் தயாரித்து அவரவர்களே சுயவைத்தியம் வழங்கி, சுகமான வாழ்க்கை வாழ்ந்தனர். உணவே மருந்தாகி போனது. செலவில்லாத எளிய இயற்கை மருந்துகளை குழந்தை முதல் முதியோர் வரை அத்தனை பேருக்கும் இச்சட்டிகளே சமைத்துத் தந்தன.

அக்காலத்தில் அனைவரிடமும் மூலிகை குறித்த அறிவு இருந்தது. காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, வெட்டிய காயம், குடற்புண், வெள்ளை வெட்டை, கர்ப்பப்பை முதல் தோல் வியாதிகள் வரை அத்தனை பாதிப்புகளுக்கும் ஒவ்வொருவிதமான மூலிகையை மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். இந்த மூலிகைகளைக் கொண்டே, முழு சுகம் கிடைத்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை என்று தென்மாவட்டம் முழுவதும் கண்மாய், குளம், குட்டை, ஏரிகளென எங்கெங்கும் விதவிதமான மூலிகைச்செடிகள் முளைத்துக் கிடந்தன.
அல்லி, தாமரை, நாயுறுவி, ஆடுதின்னாபாலை, துளசி, வெள்ளருகு, கோரை, பப்படம், இம்பூரல், ஓரிதழ் தாமரை, குப்பைமேனி, எருக்களை, தொட்டாச்சிணுங்கி, வெட்டுக்காயப் பூண்டு, அம்மான்பச்சைஅரிசி, பச்சிலை, தும்பை, நெறிஞ்சி, கண்டங்கத்தரி, மிளகுதக்காளி, நீர் முள்ளி, சங்குபுஷ்பம், தாழம்பூ, நொச்சி, வல்லாரை, பேய்குமுட்டிகாய், பிரண்டை, துத்தி, மருதாணி, வேலிபருத்தி, முடக்கற்றான்தலை, முப்பிரண்டை, புளியாம்பிரண்டை என சொல்லி முடிக்கவே மூச்சு முட்ட வைக்கிற மூலிகைச் செடிகள் நம் மண்ணில் இருந்தன. வேம்பு, மஞ்சள்நெல்லி, வில்வம், ஆலம், அரசமரம் வரிசையில் மூலிகை மரங்களுக்கும் பஞ்சமில்லை.

காலம் காட்டிய மாற்றத்தால் வெளிநாட்டு சீமைக்கருவேல மரங்களும், இறக்குமதி கோதுமையிலிருந்து சிதைந்த பார்த்தீனிய விஷச்செடிகளும் தென்மாவட்ட மண்ணில் முளைத்தன. இதேபோல், குடிமக்களுடன், தொழிற்சாலைகளும் கொட்டிய கழிவுகள், நீர் வரத்துகளை அடைத்த ஆக்கிரமிப்புகள் என தென்மாவட்ட மக்கள் வசிப்பிடங்களில் வளர்ந்திருந்த மூலிகைகள் மெல்ல அழிந்து வருகின்றன. விதவிதமான நல்ல மூலிகைகள் அனைத்தும் அழிவு தொட்டு வருவதைப்போலவே, தமிழ் பாரம்பரிய மூலிகை அறிவும் மக்களிடம் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன.
தங்கள் வசிப்பிடங்களில் அரிய மூலிகை வளர்ந்திருந்தபோதும், அந்த மூலிகையின் பெயர், அதன் பயன்பாடு இப்போதிருக்கும் எவருக்கும் தெரியாத நிலை இருக்கிறது. கண்மாய், குளங்கள், ஆறுகள் என நீராதாரங்களை காக்க மறந்ததாலும், இந்த மூலிகைகள் அழிவுக்கு ஆளாகி வருகின்றன.  தென்மாவட்ட பகுதிகளில் மிச்சப்பட்டு வளர்ந்து வருகிற மூலிகைச் செடிகளையாவது, கட்டாயம் நாம் காப்பாற்றியாக வேண்டும்.

அழகுச்செடிக்குப் பதிலாக மூலிகை!
மூலிகை ஆர்வலர் செல்வகுமாரன் கூறும்போது, ‘‘நம் சந்ததிகளுக்கு வழங்க நாம் ‘‘துரோகத்தை’’ மட்டுமே வைத்திருக்கிறோம். நம் குழந்தைகளின் வயிற்றுப் போக்கை குணப்படுத்தி வந்த புளியம்பிரண்டைஎன்றொரு மூலிகைச் செடி இன்று அழிந்து விட்டது. இப்படி ஆயிரம் ஆயிரம் மூலிகைகள் நம் தென்மாவட்ட பகுதிகளில் அழிந்திருக்கின்றன. நமக்கான அரிய பொக்கிஷங்களை நாளுக்கு நாள் நாம் பறிகொடுத்து வருகிறோம். இயற்கையை காப்பாற்றும் உணர்வு ஒவ்வொருவருக்கும் வேண்டும். கிராமங்கள், நகரங்கள் என எங்கெங்கும் நீராதாரங்களை  காப்பதில் கவனம் வேண்டும். நீராதாரங்களை காப்பதன் மூலமே நம் மூதாதையர்கள் நமக்கு காட்டித்தந்த மூலிகைகளையும் காப்பாற்ற முடியும். இது நம் பழமைச் சொத்து. இயற்கை காத்து, இழந்தவைகளை மீட்டெடுப்பது அவசியம். அரசு சிறப்பு திட்டங்கள் தீட்டி மூலிகைச் செடிகள் வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் அழகுச் செடிகளுக்குப் பதிலாக நம் வீட்டுத் தொட்டிகளிலாவது மூலிகைச் செடிகளை வளர்க்க வேண்டும். இதன் மூலம் நாமும் வளம் பெறலாம். நம் சந்ததியும் வளம் பெறும்’’ என்றார்.
திரு.பவானந்தம் அவர்கள் கூறிய சில முலிகை குறிப்புகள்: ஆடாதோடை காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும் சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும் சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும்,
நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.
நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு, மா, பலா, கிலா மருத்துவ மரங்கள்: வேம்பு, கும்பகொடளி, ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை