தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்




தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
வீரம்:
பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.
காதல்:-
தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.
நட்பு
சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.
விருந்தோம்பல்
‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு’
” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
” என்று கூறுவதிலிருந்துவிருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.
இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

நாவலன் தீவு வரலாறு