திருவாரூர் தியாகராஜர் கோயிலில் புதையலா: ரகசிய அறை மர்மம்?


 திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள இரண்டு ரகசிய அறைகளில் புதையல் இருப்பதாகவும், அதை திறந்து பார்க்க வேண்டும் என்றும் பல ஆண்டாகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பக்தர்கள் கூறி வருகின்றனர்.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. சைவ சமயத்தின் தலைமை இடமாகவும், பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆழி தேர் என்று அழைக்கப்படும் இந்த தேர் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தேர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.
அந்தத்  தேர் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. அதற்கு மக்கள் வெள்ளமென திரண்டு  தேரை வடம் பிடித்து இழுத்தனர். வருகிற 8-ம் தேதி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்காக யாகசால பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் நடப்பதற்குள்
கோயிலில் உள்ள இரண்டு ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதில் விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் அரிய வகை பொக்கிஷங்கள் இருக்கின்றன என்றும் பக்தர்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடம் பேசினோம்.
''தியாகராஜர் கோயிலில் தியாகராஜர் சுவாமிகளின் கருவறைக்குள்ளும், இரண்டாம் பிரகாரத்தில் ஆனந்தேஸ்வரர் கருவறைக்குள்ளும் இரண்டு ரகசிய அறை கல் கொண்டு மூடப்பட்டு இருக்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்நியர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து கோயில்களையெல்லாம் சூறையாடினர். சோழநாட்டு கோவில்களில்  சூறையாடியதை முகமதிய எழுத்தாளர்கள் தங்கள் குறிப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். டெல்லியிலிருந்து வந்து மதுரையை மையமாகக் கொண்டு சுல்தான்கள் ஆட்சி செய்தபோதும், தமிழகக் கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

அப்படி கொள்ளையடிக்கப்பட்ட கோயில்களில் தியாகராஜர் கோயிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலும் ஒன்று. இதனால் 80 ஆண்டு காலம் கோயில்கள் மூடப்பட்டு பூஜை எதுவும் நடக்காமல் இருந்தது என்பதைக் கல்வெட்டுகள் மூலமாக உறுதி செய்ய முடிகிறது. அந்நிய படையெடுப்புக்கு பயந்து, தியாகராஜர் கோயிலில் இரண்டு அறைகளிலும் விலை உயர்ந்த நகைகள், சாமி உருவ சிலைகள் மற்றும் காண கிடைக்காத பொக்கிஷங்களை வைத்து கர்ப்பகிரக வாயிலை மூடியிருக்க வேண்டும். மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொருட்கள் தியாகராஜர் கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது என கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தப் பொருட்களும் இந்த அறைகளில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மேலும், பல ஆண்டுகளாக ரகசிய அறைகளைத் திறக்க வேண்டும் என பலர் கூறி வருகிறார்கள். ஆனால், அறநிலையத்துறை அதற்கு செவிசாய்க்க மறுக்கிறது. இப்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் கோயிலை சேதப்படுத்தாமல், அபிஷேக நீர் வெளியேறும் கோமுகம் வழியாக கேமராவுடன் கூடிய நவீன கருவியை செலுத்தி, ரகசிய அறைக்குள் என்ன இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம். ஆனால், ஆட்சியாளர்களும், அறநிலையத்துறை அதிகாரிகளும் அதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். அப்படி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், அவர்கள் செய்ய மறுப்பது ஏன் என்பதுதான்  புரியவில்லை'' என்றார்.

பக்தர்கள் சிலரிடம் பேசினோம்.
''திருவனந்தபுரம் பத்மநாதசுவாமி கோயிலில் இதேபோல் ரகசிய அறைகளைத் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி அவை திறக்கப்பட,  ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் கிடைத்தன . இன்றளவும் அவர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் தியாகராஜர் கோயிலையும் ஆய்வு செய்ய உடனே அரசு உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற அறிய வகை பொக்கிஷங்களைக் காண்பதுடன் நம் பெருமையை உலகம் அறிய செய்யலாம்'' என்றனர்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை