முதுமக்கள் தாழி - முடிச்சு அவிழும் மர்மங்கள்




அந்த காலத்துல யாரும் வயசான பின்னாடியும் யாரும் சீக்கிரம் சாவமாட்டாங்களாம் அதுக்காக என்ன பண்ணுவாங்களாம் சாகாத கிழவங்களை, கிழவிகளை சம்மணம் போட்டு உட்கார வச்சு அவங்க அளவுக்கு ஒரு பானை செஞ்சு உசிரோட பொதச்சிருவாங்களாம்..... என தெற்கத்திப்பக்கம் ஒரு நாட்டுப்புற கதை மக்களிடையே நிலவி வருகிறது. பாட்டியிலிருந்து, பேரர்களுக்கு இக்கதை சென்ற நூற்றாண்டு வரை சொல்லப்பட்டு வந்தது. நம் பாட்டிமார்கள் காலம் காலமாக செவிவழிச் செய்திகளாக கூறும் நாட்டுப்புற கதைகளில் முதுமக்கள் தாழி குறித்த கதைப்புனைவு நிறையவே இருக்கிறது.

மூத்தோர் வணக்கம் தமிழர்கள் போற்றிய ஒரு வழக்கமாகும். பேரளவு தெய்வங்கள் எல்லாம் எட்டிப்பார்க்காத சங்க கால சமய வரலாற்றில் மூத்தோர் வணக்கம் தெய்வ வழிபாடாக சிறப்பிக்கப்பட்டாலும் சில வினோத பழக்கங்களும் சங்க கால மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. அவற்றில் ஒன்றுதான் முதுமக்கள் தாழி என்னும் சவ அடக்க முறையாகும். ‘தாழியுடன் கவிப்போர்’ என மணிமேகலை இவ்வழக்கம் குறித்துச் சுட்டுகிறது. சோழன் கிள்ளி வளவன் இறந்துவிட அவன் புகழைப்பாடும் ஐயூர் முடவனார் பானைகள் செய்யும் குயவரை விளித்துப்பாடும் பாடல் ‘கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே’ என அமைந்துள்ளது. இதன் வாயிலாக கிள்ளிவளவனை வளவன் உடலை தாழியில் இட்டுப்புதைத்த செய்தி அறியப்படுகிறது.
முதுமக்கள் தாழிக்கு ஈமப்பேழை, மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு. முதுமக்கள் தாழி அரை அடி முதல் ஏழு அடி வரையிலான பல்வேறு அளவுகளில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுச் சமவெளிப்பகுதிகளில் இம்முறை பரவாலாக பின்பற்றப்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன. முதுமக்கள் தாழி முறையைப் பொருத்தமட்டில் மூன்று விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. ஒன்று தாழியில் இறந்தபின்பு சடலத்தை சம்மணமிட்டு அமரவைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டத்தில் வைத்து புதைப்பது. இம்முறையில் பானை பெரிய அளவினதாக இருக்கும். இரண்டாவது முறையானது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைப்பதாகும். மற்றொரு முறையானது இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் இட்டுப் புதைக்கும் முறையாகும்.
முதன்முதலாக ஈமச்சின்னங்கள் ஊர் இருக்கைகளிருந்து தன்னந்தனியாக ஓரிடத்தில் புதைக்கும் வழக்கம் தமிழகத்தைப் பொருத்த மட்டில் பெருங்கற்காலத்திலேயே வழக்கத்திற்கு வந்தது. முதுமக்கள் தாழியினுள் ஒரே நபரின் எலும்புக்கூடுகள் மட்டும் காணப்படுவதில்லை. ஒரே நேரத்தில் இறந்த நபர்களின் எலும்புக்கூடுகள் கூட ஒன்றாக புதைக்கப்பட்டிருக்கின்றன. கொடிய நோய்களில், குறைமாதத்தில் இறந்த குழந்தைகளும் தொட்டில்பேழை எனப்பட்ட தாழியில் இட்டு புதைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, கொடுமணல், அழகன்குளம், அரிக்கமேடு, மாங்குடி (சங்கரன்கோவில் தாலுகா), பல்லாவரம், திருக்கழுகுன்றம் மற்றும் கர்நாடகாவின் ஜடினகள்ளி, ஆந்திராவில் இருளபாண்டா, கவல குண்டா போன்றவை முதுமக்கள் தாழி முறை சிறந்திருந்த இடங்களாக தொல்லியல் துறை ஆய்வுகளால் கண்டறியப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டை பொருத்தமட்டில் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திலும் ஓராயிரம் தாழிகள் இருப்பதாக 1895-1905 வரை இப்பகுதியை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் அலுவலராக இருந்த அலெக்சாண்டர் ரே குறிப்பிடுகிறார்.

தமிழர்கள் முதுமக்கள் தாழியில், இறந்த மனிதனின் உடலை சம்மணமிட்டு அமரவைத்து, கையில் அவன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து இடுப்பளவிற்கு ஏதேனும் ஒரு தானியத்தையும் அதற்கு மேலே அவன் பயன்படுத்திய ஆடை, அணிகலன்கள் போன்றவற்றை வைத்து அருகிலேயே ஒரு அகல் விளக்கினை எரியும் நிலையில் வைத்து பானையை மூடினர். தாழியைப் புதைத்த குழியானது மணல் இடப்பட்டு பாறையால் மூடப்பட்டது. அப்பாறை மீது மணல் கொட்டி பாதி முட்டை வடிவம் போன்றுள்ள பாறை ஒன்றால் மூடப்பட்டது. பாறையைச்சுற்றி ஒரு முழம் உயரமுடைய கற்கள் புதைக்கப்பட்டன. கேரளத்தின் குடைக்கல், தொப்பிக்கல் போன்றவை இத்தகையதாகும். இவற்றிலெல்லாம் தாழிகள் இருப்பதை மேலே உள்ள கற்சின்னங்கள் உணர்த்துவனவாக இருக்கின்றன.
முதுமக்கள் தாழி புதைக்கப்பட்ட இடத்தில நடுகல் நட்டும் தமிழர்கள் வழிபாடு செய்தனர். நடுகல் என்பது போரில் இறந்த வீரர்க்கு அவர்களது சடலத்தை புதைத்த இடத்தில நடப்படும் வீரக்கல் ஆகும். இவ்வாறு போரில் இறந்த வீரனின் மனைவி உடன்கட்டை ஏறி உயிர் நீத்தாள், அல்லது கைம்மைநோன்பு என்னும் பின்பற்ற இயலா வாழ்க்கை முறையைப் பின்பற்றினாள். கைம்மை நோன்பின் ஒரு வழக்கமாக கணவன் இறந்தவிடத்தில் நடப்பட்ட நடுகல்லை, நடுகல் வீரனின் மனைவி வணங்கிட தலைப்பட்டனர். போரில் இறந்த கணவனை சாந்தப்படுத்த, நடுகல்லை சுற்றி வளர்ந்திருந்த அருகம்புல்லை மாலையாக கட்டி நடுகல்லிற்கு சூட்டி தொழுதனர். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற மூத்தோர் மொழி இவ்வாறுதான் மறைபொருளாக நடுகல் வணக்கத்தையும், கைம்மை நோன்பையும் குறித்தது.
ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள் சிலவற்றில் திரிசூலம் போன்ற இரும்புக்கருவிகளும் தொல்லியல் அகழாய்வின்போது கண்டறியப்பட்டன. திரிசூலம் என்பது பண்டைய தொடக்க கால உழவுக்கருவி ஆகும் இது ஆயுதமாக பிற்காலத்தில் தோற்றம் பெற்றது. வேட்டைச்சமூகத்திலிருந்து வேளாண் சமூகத்திற்கு தமிழர்கள் மாறத் தலைப்பட்டபோது உழவுக்கருவியான சூலம் ஆயுதமாக்கப்பட்டது. வேளாண்மை செய்யும் பணியை பெண்கள்தான் ஏற்றிருந்தனர். அவர்களே வேளாண்மைக்கு பயன்படுத்தும் நோக்கில் தரையை உழுவதற்கு வசதியாக திரிசூலம் போன்ற கொழுவை வைத்திருந்தனர். இதுவே பின்னர் பெண் தெய்வங்களுக்கு உரிய ஆயுதமானது. பெண் தெய்வங்களிடம் இருந்து ஆண் கடவுளர்கள் காலப்போக்கில் சூலத்தை பெற்றுக்கொண்டனர். இது மறைமுகமாக உரிமைகள் தாய்வழிச்சமூகத்திடம் இருந்து தந்தை வழிச்சமூகத்திற்கு மாற்றப்பட்டதை குறிக்கிறது. ஆதிச்சநல்லூர் தாழிகளில் சூலம் காணப்படுவது அம்மக்கள் வேளாண் சமூகத்திற்கு மாறுதல் அடைந்த நாகரீக வளர்ச்சியை குறிப்பதாகலாம்.

ஆதிச்சநல்லூரைப் பற்றி குறிப்பிடவேண்டிய ஒரு செய்தி இங்கு சில பெரிய தாழிகளில் முழு எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதுதான். இவை ஆசீவக சமயத்தவருக்குரியது என கருத வாய்ப்புள்ளது. எவ்வாறெனில் ஆசீவக சமயத் துறவிகளிடம் வாழ்வின் இறுதி நாட்களில் தாழியில் புகுந்து தவம் மேற்கொண்டு உயிர் துறக்கும் ஒரு வினோத வழக்கம் இருந்தது. ஆசீவகம் என்பது மகாவீரர், புத்தரின் சம காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மற்கலி கோசலர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமயமாகும். லோகாயுதம் இவர்களது கொள்கையாகும். தற்போதைய அகழாய்வுகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பலவிடங்களில் இருவகை அமைப்புடைய தாழிகள் பெரும்பாலும் காணக்கிடைக்கின்றன. ஒன்று குறுகிய வாயினை உடைய தாழிகள்; இன்னொன்று பெரிய அகன்ற வாயினை உடைய தாழிகள். இரண்டு வகை தாழியிலும் மனித எலும்புகள் காணப்பட்டாலும் அகன்ற வாயுடன் கூடிய தாழிகளில் உட்கார்ந்திருக்கும் நிலையில் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இத்தகைய அமர்ந்த நிலையில் எலும்புக்கூடுகள் காணப்படும் தாழிகளே ஆசீவகர்கள் தவம் செய்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்ட தாழிகளாகும். ஆசீவகத் துறவிகளின் உயர் நிலைத்தவமாக அவர்கள் மண்பானைகளில் நுழைந்திருந்து செய்யும் தவத்தைக் கூறுவர்.
ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணியில் காளிக்கு கூளி கூறிய பகுதியில்
"தாழியிற் பிணங்களுந்தலைப் படவேறுத்தப்
பாழியிற் பிணங்களுந் துளபெழப் படுத்தியே "
என்னும் வரிகள் இவ்வுண்மையை புலப்படுத்தும். மேலும் தொல்காப்பிய பொருளதிகாரத்தில் புறத்திணைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் எழுதிய
" தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை"
என்ற அடிகளும் இம்முறை பற்றி தெரிவிக்கிறது. இவ்விதம் தாழியில் இருந்து தவம் செய்த ஆசீவகர்கள் அதனின்று வெளியேறாது அங்கேயே அம்முடிவை எய்தி வீடுபேற்றினை அடைந்திருக்க வேண்டும். இவ்வாறு துறவிகள் மட்டுமன்றி உடல் தளர்ந்தும், நடமாட சக்தியற்றும் உயிர் துறவாமலிருக்கும் முதியவர்களும் உயிருடன் புதைக்கப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில் கொடிய நோயால் மரணம் அடைந்தவர்களும் பானையில் இட்டு உயிருடன் புதைக்கப்பட்டனர். வயதான முதியோர்களும் நடமாட இயலாதவர்களும் புனித நீராட்டலுக்குப் பின்னர் அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் உயிருடன் கருணைக்கொலை செய்யப் பெற்றதை சோழர் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
உடல் தளர்ந்த முதியவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டதை திருவெண்காட்டுப் புராணம்
"சித்த மகிழ்ந் தீனமறச் செங்கோன டாத்த நமன்,
உத்தம னென்றந் நாளுயிர் கொடு போகாமையினால்
மொய்த்த முதியோர்க்கு முதுமக்கட்ச்சாடி பல
வைத்த குலதீரனே மன்னர்கோ மன்னர்கோ "
என சோழமன்னன் முதியவர்களை சாடியில் இட்டுப்புதைக்க உதவியதை ஆவணப்படுத்துகிறது. உடன்கட்டை ஏறி பெண்கள் பத்தினி தெய்வமாக ஒருபுறம் மாறிக்கொண்டிருந்த நிலையில் கணவனது உடல் புதைக்கப்பட்ட தாழியில் தானும் அமர்ந்து வீரமரணத்தை தழுவியதாகவும் இலக்கியங்களில் குறிப்புகள் காணக்கிடைகின்றன.
முதுமக்கள் தாழி முறையின் வேரானது பாலஸ்தீனம் வரை பரவிக் கிடைக்கிறது. ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகள் ஆஸ்ட்ரிக் இனமக்களின் மண்டை ஓட்டுடன் பெருமளவில் ஒத்து காணப்படுகின்றன. ஆஸ்ட்ரிக் இன மக்கள் இந்தியாவின் பண்டைய இன மக்களில் ஒருவராவார். வேத காலத்தில் நிஷாதர் எனப்பட்டவர்கள் இம்மக்களே. கி.பி 6 ஆம் நூற்றாண்டில் கோலர், பஹ்லவர் எனப்பட்ட இவர்கள் இந்த நூற்றாண்டில் கோலாரியர், முண்டர் எனப்படுகின்றனர். தென்னிந்திய பழங்குடி மக்களான மலை வேடர், இருளர், குறும்பர், காடர், சோளகர், பழையர் போன்றோரிடத்தில் இவ்வினப்பண்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இவர்கள் பாலஸ்தீனப்பகுதியில் தோற்றம் பெற்றதாக ஹட்டன் கருதுகின்றார். பாலஸ்தீனத்திலும் தமிழர்கள் பின்பற்றிய இத்தகைய தாழி அடக்க முறை கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரை பின்பற்றப்பட்டு வந்தது. பண்டைய பாலஸ்தீனம், கிரேக்க ரோமானிய நாடுகளில் பின்பற்றப்பட்ட இறப்புச்சடங்குகளும் தமிழர்கள் பின்பற்றிய சடங்கு முறைகளும் ஏறக்குறைய ஒத்தே இருந்தன. பவானி , நொய்யல் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகளில் நெற்றிக்காசாக வைக்கப்பட்ட ரோமானிய நாணயங்களும் கிடைத்துள்ளன. இறந்த பிறகு நெற்றியில் காசு வைப்பது அப்போதைய கால கட்டத்தில் தமிழர்கள் மட்டுமல்லாது கிரேக்கர்களாலும், ரோமானியர்களாலும் பின்பற்றப்பட்டு வந்தது. இதை திருநெல்வேலி சுற்று வட்டாரப்பகுதிகளில் வழிச்செலவுக்காசு என்றழைப்பர். பாலஸ்தீன முதுமக்கள் தாழிகளிலும் இத்தகைய நாணயங்கள் கிடைத்துள்ளது ஆச்சரியம் தருவதாக உள்ளது.
ஏன் தமிழர்கள் இவ் வழக்கத்தை பின்பற்றினர் ? என்னும் புதிருக்கு விடைகாண்பது அவசியமானதாகும். எகிப்திய நாகரீகத்தில் சவ அடக்க முறையில் பின்பற்றப்பட்ட சில அம்சங்கள் முதுமக்கள் தாழி முறையை ஒத்தே காணப்படுகின்றன. பண்டைய எகிப்தில் மரணம் என்பதே இல்லை என நம்பப்பட்டு வந்தது. எகிப்தியர்கள் பிரமீடுகளுக்குள் சடலத்தை வைக்கும் முன்னர் சடலத்தின் முக்கிய உறுப்புகளை மண்ணால் செய்யப்பெற்ற சாடிகளில் (Canopic jar) இட்டுப்புதைத்தனர். இறந்த நபரின் நுரையீரலை குரங்கு வடிவிலான சாடியிலும், வயிற்று உறுப்புகளை ஓநாய் உருவச்சாடியிலும், கல்லீரலை மனித முகம் கொண்ட சாடியிலும், குடல் முதலானவற்றை சிங்க வடிவிலான சாடியிலும், எஞ்சிய உடலை தைலமிட்டு தனியாகவும் புதைத்தனர். பண்டைய எகிப்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு தங்களது மன்னர் மீண்டும் வருவார் என்ற அதீத நம்பிக்கையில் பிரமீடுகளுக்குள் மன்னனது உடலை பாதுகாத்தார்களோ, மகத்தான மனிதர்களுக்கு மறுபிறப்பு உண்டு இறப்பில்லை என்று நம்பினார்களோ, அதே நம்பிக்கையில்தான் முதுமக்கள் தாழியில் வைக்கப்பட்ட தங்கள் தலைவரும் மீண்டும் வந்து தங்களை வழி நடத்துவர் எனத் தமிழர்கள் கருதினர். இதனால்தான் தாயின் கர்ப்பப்பை வடிவிலான பானைகளில் இறந்தாரை இட்டுப் புதைத்தனர். ஆம் முதுமக்கள் தாழியின் அமைப்பினை உற்று நோக்கினால் கர்ப்பப்பை வடிவிலேயே தாழி அமைக்கப்பட்டிருக்கும் உண்மை புலானகும்.
மட்பாண்டத்திற்கும் மனிதனுக்கும் உண்டான உறவு மகத்துவமானதாகும். மட்பாண்டம் என்பது தமிழர்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். மனிதன் பிறப்பிலிருந்து, இறப்பு வரை கூடவே வருகிறது. ஆற்றுச்சமவெளியில் மனிதன் வாழ ஆரம்பித்தது முதல் மனிதனுக்கும் மட்பாண்டத்திற்குமான உறவு தொடங்குகிறது. இறுதியில் சடலத்தை மயானத்தில் கிடத்தி காரியம் செய்வதோடு மட்பாண்டமும் மனிதனுடனான உறவை முறித்துக்கொள்கிறது. சென்ற நூற்றாண்டு வரை இத்துடன் தொடர்புடைய ஒரு சடங்குமுறை எண்ணெய் முழுக்கு என்னும் பெயரில் தென்மாவட்டங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. எண்ணெய் முழுக்கு என்பது வயதான நடமாடச்சக்தியற்ற முதியவர்களை அல்லது நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் முதியவர்களை நல்லெண்ணெய் தேய்த்து இதமான வெந்நீரில் குளிக்கவைத்து, குளித்த பிறகு இளநீர் கொடுப்பர். ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருப்பதால் இந்நிகழ்வுக்குப்பின்னர் யாரும் உயிர் பிழைத்ததாக வரலாறில்லை. இதில் குளிர் ஜுரம் வந்து ஒரே ராத்திரியில் சிவலோகம் சென்று பலரும் நலமுடன் இருப்பதாக சிறந்த கதை சொல்லியான எனது பாட்டியும் கதை சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நீங்களும் இதுபோன்ற கதைகளை கேட்டிருக்கலாம். எல்லாக்கதைகளிலும் புனைவுடன் உண்மையும் இழையோடியே இருக்கும், ஒவ்வொன்றிலும் ஒரு வரலாற்று நிகழ்வும் மறைபொருளாக்கப்பட்டிருக்கும். அதனை வரலாற்றாளன் கண்டறிந்து ஊருக்குச் சொல்வது கடமையாகும்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை