பாதாள அறையை திறந்தால் கல்லாகி போவர் தில்லாபுரி கோயில் திக்..திக்..



கேரள தலைநகர் திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளில் இருந்து குவியல்குவியலாய் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்நியர் படையெடுப்புகளின்போது பெருஞ்செல்வத்தை காப்பாற்ற மன்னர்கள் கோயில் ரகசிய அறையில் அவற்றை மறைத்து வைத்து காத்துள்ளனர். திருவனந்தபுரம் கோயிலை அடுத்து தமிழக கோயில்களிலும் புதையல் இருக்கலாம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. 
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நிர்மாணித்து வழிபட்ட பல கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. அவை வழிபடுவதற்காக மட்டுமின்றி, இயற்கை அழிவு, எதிரிகளின் தாக்குதல் போன்றவற்றில் இருந்து மக்களையும், செல்வங்களையும் காப்பாற்ற திட்டமிட்டு கட்டப்பட்டவை. இந்த கோயில்களில் நீங்காத மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. கோயில் பொக்கிஷங்களை பூதங்கள் காவல் காக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளதால், இன்னும் அவை வெளிச்சத்துக்கு வராமலே உள்ளன. 
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் முந்தைய காலத்தில் கொங்குநாட்டின் தலைநகராக இருந்தது. இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். கங்க வம்சத்தை சேர்ந்த மன்னர்கள், சோழ மன்னர்கள் விக்ரமன், வீரராஜேந்திரன், குலோத்துங்கன், பாண்டிய மன்னர்கள் வரிசையில் மாறவர்மன் சுந்தரபாண்டியன், ஜடாவர்மன், வீரபாண்டியர், விஜயநகர சாம்ராஜ்யத்தில் வீரவிஜயராயன், தாராபுரம் தேவராயர் என பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் கட்டிய பல கோயில்கள் இப்பகுதியில் உள்ளன.
அவற்றில் அமராவதி நதிக்கரையோரம் உள்ள தில்லாபுரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் பெரிய பாதாள அறைகள் உள்ளதாகவும், அவற்றில் இருந்த பொற்சிலைகளை களவாடிய  கொள்ளையர்கள் கற்சிலைகளாக மாறி போனதாகவும் வழிவழியாக கூறப்பட்டு வருகிறது. தாராபுரம் கோட்டைமேட்டில் உள்ள உத்திர வீரராகவ பெருமாள் கோயில் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் பிரமாண்டமான பாதாள அறைகள் கருங்கல் கொண்டு மூடி பாதுகாக்கப்படுவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. இந்த ரகசிய அறைகளில் செல்வங்கள் கொட்டி கிடக்கிறது என்று சொல்லப்படுகிறது. வீரராகவ பெருமாள் கோயில் உள்ள பகுதியில்தான் மன்னர்களின் அரண்மனைகள் இருந்ததாக கூறும் கல்வெட்டுகள் தாம் இதற்கு சாட்சி என்கிறார்கள் பக்தர்கள்.  
முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சண்டை நடந்தபோது தாராபுரம் முக்கிய போர்க்களமாக இருந்திருக்கிறது. மதிப்பு மிக்க செல்வங்களையும் பாதுகாக்க முடிவு செய்த அரசர்கள், உத்திர வீரராகவப் பெருமாள் கோயிலில் அவற்றை மறைத்துள்ளனர். கோயிலுக்கு பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும் என கருதி 5 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பெரிய பெரிய கருங்கற்களை கொண்டு 12 அடி உயரத்துக்கு கோயிலை சுற்றிலும் பிரமாண்ட மதில் சுவர் கட்டியுள்ளனர். தில்லாபுரி அம்மன் கோயில், அகஸ்தீஸ்வரர் கோயில், வேணுகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் இருந்து விலைமதிப்பற்ற சிலைகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ள பாதாள அறையில் வைத்து மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
கோயில் செல்வத்தோடு மன்னர்களின் ஆபரணங்களும் உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே பாதாள அறைகளை ஆய்வு செய்தால் கோயிலை பற்றிய பல மர்மங்கள் அவிழும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அதே வேளையில் தில்லாபுரி அம்மன் கோயில் பொக்கிஷங்களை எடுத்தவர்கள் கற்சிலைகளாக மாறியது போல, வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ள பொக்கிஷங்களை எடுப்போருக்கு என்ன கதி நேருமோ என்றும் சில பக்தர்கள் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை